திருவள்ளூர் பஜாரில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள் முகக்கவசம் அணியாத வியாபாரிகள்: கொரோனா வேகமாக பரவும் அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பஜாரில் சமூக இடைவெளி இல்லாமல் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் தினமும் கூடுகின்றனர். அதில், பெரும்பாலான வியாபாரிகள், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு, 34 வகையான தொழில் நிறுவனங்கள் இயங்க, கட்டுப்பாடுகளுடன், மாநிலம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. திருவள்ளூர் நகரில், தினசரி மார்க்கெட் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், குறைந்தளவே கடைகள் திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பஜார் சாலையில் பெரும்பாலான வியாபாரிகள், முகக்கவசம் அணியாமல் இருந்தனர். மேலும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக உலா வந்தனர்.

திருவள்ளூர் நகரப்பகுதியில் தினமும் 10க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், பஜாரில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பஜார் பகுதியில், வியாபாரிகள், பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: