கொரோனா தடுப்பு பணிக்காக பிடித்தம் செய்யப்பட்ட போலீசாரின் ஒருநாள் ஊதியம் ₹8.41 கோடி திரும்ப ஒப்படைப்பு

* தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசிரியர்கள், தமிழக அரசு ஊழியர்கள், போலீசார் ஆகியோர் தாமாக முன்வந்து ஒருநாள் சம்பளத்தை வழங்கினர். இந்நிலையில்,  போலீசார் இந்த கொரோனா தொற்று காலத்தில் அதனை கட்டுப்படுத்த அர்ப்பணிப்போடு ஓய்வில்லாமல் வேலை செய்து வருகின்றனர். எனவே அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிதியை திரும்ப வழங்க வேண்டும் என டிஜிபி அரசிடம் கோரிக்கை வைத்தார்.  

இதை பரிசீலனை செய்த தமிழக முதல்வர், டிஜிபியின் கோரிக்கையை ஏற்று போலீசாரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஒருநாள் சம்பளத்தை திரும்ப கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசாரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஒரு நாள் சம்பளம் ₹8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286 திரும்ப காவலர்களுக்கு வழங்க முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட எஸ்.பி.,கள் மற்றும் காவல்துறையின் அனைத்து  பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய மாநில அரசின் 4ம் பிரிவு ஊழியர்கள் சம்மேளன தலைவர் கே.கணேசன் கூறும்போது, ‘போலீசார் போன்று தமிழக அரசு ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கடந்த மூன்று மாதமாக கொரோனாவை கட்டுப்படுத்த களத்தில் நின்றுபோராடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஒருநாள் ஊதியத்தையும் தமிழக அரசு திரும்ப வழங்க வேண்டும்’என்றார்.

Related Stories: