‘எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பேசுங்கள்’ சமூக வலைதள பிரசாரம் தொடங்கியது காங்கிரஸ்: கட்சி தலைவர் சோனியா, ராகுல் வீடியோ வெளியீடு

புதுடெல்லி: ஊரடங்குக் காலத்தில் 22 முறை எரிபொருள் மீதான விலையை மத்திய அரசு உயர்த்தி மக்களை மத்திய அரசு கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியானது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் “எரிபொருள் விலை உயர்வு எதிராக பேசுங்கள்” என்ற  தலைப்பில் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. எரிபொருள் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசுக்கு பொதுமக்கள் அழுத்தம் தர வேண்டும் என்று இந்த பிரசாரத்தின் மூலமாக வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைவர் சோனியாகாந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ஒருபுறம் கொரோனா நோய் தொற்று மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து மக்களுக்கு வாழ்க்கையை மிகவும் கடினமானதாக்கி உள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற நான் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி அரசிடம் வலியுறுத்துகிறோம்.

விலை உயர்வை திரும்ப பெற்று அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். கடினமான நேரத்தில் நாட்டு மக்களுக்கு துணை நிற்பது தான் அரசின் கடமையே தவிர அவர்களது துயரத்தையும் லாபத்தையும் பயன்படுத்திக் கொள்வது கிடையாது. நியாயமற்ற முறையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதற்கு ஒரு புதிய உதாரணத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இது அநியாயம் மட்டும் அல்ல உணர்ச்சியற்ற செயலாகும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வானது விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் மற்றும் சிறு தொழில் செய்வோரையும் நேரடியாக பாதிக்கிறது கடந்த 3 மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதன் மூலம் லட்சம் கோடியை வசூலிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவை அனைத்தும் நடக்கிறது.

இவ்வாறு சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.  இதேபோல் ராகுல்காந்தி தனது டிவிட்டரில் பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில், “கொரோனா வைரஸ் நோய் தொற்றின்போதும் மற்றும் சீனாவின் தாக்குதலின்போதும் மத்திய அரசு மக்களை அப்படியே விட்டுவிட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை அதிகரிப்பதன் மூலமாக மத்திய அரசு மக்களை கொள்ளை அடிக்கிறது. விலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசு அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் மக்கள் தங்களது குரலை உயர்த்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: