தமிழகத்தில் மொத்த பாதிப்பு 86 ஆயிரமாக உயர்வு ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா

*சென்னையில் புதிய உச்சமாக  2,167 பேருக்கு தொற்று

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 3,949 பேருக்கு தொற்று உறுதியானது. குறிப்பாக, சென்னையில் நேற்று 2,167 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை என்று மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக 3,949 பேருக்கும், சென்னையில் 2,167 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நேற்று மட்டும் 30,005 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,949 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் வசிப்பவர்கள் 3,841  பேர். வெளிநாடு  மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 108 பேர். அதிகபட்சமாக சென்னையில் 2,167 பேர், மதுரையில் 290 பேர், செங்கல்பட்டில் 187 பேர், திருவள்ளூரில் 154 பேர், வேலூரில் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,379 பேர் ஆண்கள். 1,570 பேர் பெண்கள். தற்போது வரை 53,124 ஆண்கள், 33,079 பேர் பெண்கள், 21 பேர் திருநங்கைகள். நேற்று 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 47,749 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 37,331 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டும் தனியார் மருத்துவமனையில் 18 பேர், அரசு மருத்துவமனைகளில் 44 பேர் என 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 37 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு 7 பேர், திருவள்ளூர் 5, ராமநாதபுரம் 2, மதுரை 4, நெல்லை, ஈரோடு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், காஞ்சிபுரம் தலா ஒருவர் என மொத்தம் 62 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 11 பேர் எந்தவித இணை நோய்களும் இல்லாமல் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

13 வயது  சிறுவன்  உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று மரணம் அடைந்தான்.

Related Stories: