கொரோனா ஊரடங்கில் இங்கிலாந்து, கத்தார், துபாயில் சிக்கிய 510 பேர் சென்னை திரும்பினர்

சென்னை :  கொரோனாவால் பலர் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் சிக்கிய 150 பேர், ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் மூலம் நேற்றுமுன்தினம் சென்னை வந்தனர். அவர்களில் 80 ஆண்கள், 54 பெண்கள், 13 சிறுவர்கள், 3 குழந்தைகள். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்த ஒருவர் மட்டும் இலவச தங்குமிடமான தண்டலம் தனியார் விடுதிக்கும், 149 பேர் கட்டணம் செலுத்தி தங்கும் இடமான சென்னை ஓட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர். கத்தார் நாட்டில் தோகா நகரில் இருந்து இண்டிகோ தனியார் சிறப்பு விமானம் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தது. அதில் 179 பேர் வந்தனர். இவர்கள் கத்தாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள். அந்த நிறுவனமே சிறப்பு விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.

இவர்களுக்கு அரசின் இலவச தங்கும் இடங்கள், விமான நிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனை கிடையாது. இதையடுத்து அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்த சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.அங்கேயே தனியார் மருத்துவ குழுவினர், மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயில் இருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்றுமுன் தினம் இரவு 181 பேருடன் சென்னை வந்தது. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்த 129பேர் இலவச தங்குமிடமான தனியார் மருத்துவ கல்லூரிக்கும், 52பேர் கட்டணம் செலுத்தி தங்கும் இடமான சென்னை நகர ஓட்டல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Related Stories: