தமிழகத்தில் கொரோனா நோயை குணப்படுத்த சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறையை செயல்படுத்துகிறோம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றை குணப்படுத்த சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளை சிறப்பாக செயல்படுத்தி நோயாளிகளை குணப்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட வரதம்மாள் கார்டன், பராக்கா சாலையில் இயங்கி வரும் கொரோனா தடுப்பு முகாமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று காலை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திரு.வி.க. நகர் மண்டல சிறப்பு அதிகாரி அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய்துறை அலுவலர் அருணா, மண்டல அதிகாரி நாராயணன் உட்பட பலர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

 கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்த முறையான மருந்து இல்லாவிட்டாலும், தமிழகத்தில் கொரோனா தடுப்புக்காக சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.  திரு.வி.க. நகர் மண்டலத்தில் இதுவரை 4,387 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ெசய்யப்பட்டுள்ளது. தற்போது 1496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேரிடர் மேலாண்மை தடுப்பு முறை மூலம் கொரோனா தடுப்பு பணி நடந்து வருகிறது. உண்மையான சிகிச்சை மற்றும் கட்டாய தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கில் தளர்வு செய்து இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: