சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய காவலர்கள் நியமனம்....! சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 27 பேர் நியமனம் செய்து எஸ்.பி உத்தரவு

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 27 பேர் புதிதாக நியமித்துள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர்கள் உட்பட 27 பேரை நியமித்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, காவல்நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், சாத்தான் குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிற காவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், புதிய ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள் மற்றும் 17 காவலர்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெர்னட் சேவியர், சாத்தான் குளம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கோவில்பட்டி மற்றும் புதுக்கோட்டையில் பணியாற்றும் மணிமாறன், முத்துமாரி ஆகிய இருவர் எஸ்.ஐ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் பணியாற்றும் 17 காவலர்கள் சாத்தான் குளத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: