தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது

* கூடுதல் படுக்கை, ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த முடிவு

* தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பு

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ெகாரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது. மேலும், அங்கு கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மதுரை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி உட்பட 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினமும் கொரோனா  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு, சென்னை மற்றும்  வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த சென்னை, கோவை, வேலூர், மதுரை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் உள்ள மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டது. மேலும், அந்த வார்டுகளில் உள்ள 71 கோடி செலவில் ஒவ்வொரு படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்து தரப்பட்டுள்ளது.இந்த நிலையில் தற்போது சென்னை போன்று பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால், அங்குள்ள மருத்துவமனைகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 30 முதல் 200 படுக்கைகள் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு வட்டார மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதி செய்து தரப்படுகிறது. குறிப்பாக, 30 சதவீத படுக்கைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு படுக்கைகளுக்கு தனித்தனியாக ஆக்சிஜன் குழாய் அமைக்கப்படுகிறது. மேலும், இந்த மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டன.

தற்போது 71.82 கோடி செலவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு மருத்துவகல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைத்தல் மற்றும்  இதர கட்டிடப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு 59 இடங்களில் கொரோனா வார்டுகளில்  ஆக்சிஜன் வாயு அமைப்பு நிறுவும் பணிகள் 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள 31 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் மற்றும் 162 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளுக்கு பயன்பாட்டில் உள்ளன.

தற்போது, மாநிலம் முழுவதும் 200 படுக்கைகளுக்கு கீழ் உள்ள சுமார் 152 இடங்களில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வாயு அமைப்பு நிறுவுதல் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளை பொதுப்பணித்துறை செயல்படுத்தி வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: