கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் செயல்பட கூடாது: தமிழக அரசு உத்தரவு

* அலுவலகங்களில் ஓரிருவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் அவர்கள் அலுவலகத்திற்கு 48 மணி நேரத்திற்குள் வந்திருந்ததும்

தெரியவந்தால் முழு அலுவலகத்தையும்மூட தேவையில்லை.

சென்னை: கொரோனா நோய் தொற்று உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில்   அலுவலகங்கள் செயல்படக்கூடாது என்றும், மற்ற பகுதிகளில் அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் தவிர எந்த அலுவலகங்களும் செயல்படக் கூடாது. கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத பகுதிகளில் செயல்படும் அலுவலகங்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை மற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

நோயாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். மருத்துவம் தொடர்பாக மட்டுமே வெளியில் செல்லலாம். இதை அந்தந்த அலுவலகங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், கொரோனா தொற்று பரவாமல் இருக்க கீழ்க்கண்ட ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்ய வேண்டும். முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்கள் உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். முடிந்தவரை சாப்பாட்டு நேரம், தேனீர் நேரங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஊழியர்கள், அதிகாரிகள், பார்வையாளர்களுக்கு தனி வழி அமைக்கலாம். லிப்டுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்.

அலுவலகங்களில் ஏசிக்களின் டெம்பரேச்சர் 24 முதல் 30 டிகிரிக்குள் இருக்குமாறும், வெளிக்காற்று வருவதற்கான வசதிகள் இருக்குமாறும் வசதி செய்ய வேண்டும். ஒருவருக்கு மேல் எண்ணிக்கையில் அலுவலகத்தையோ, அறைகளையோ பகிர்ந்துகொள்ளும் நிலை ஏற்படும்போது அதில் யாருக்கேனும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவரை தனிமைப்படுத்த வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்குக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது மாவட்ட உதவி எண்ணை அழைக்க வேண்டும். அலுவலகங்களில் ஓரிருவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் அவர்கள் அலுவலகத்திற்கு 48 மணி நேரத்திற்குள் வந்திருந்ததும் தெரியவந்தால் முழு அலுவலகத்தையும் மூட தேவையில்லை.

கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தொற்றை அழிக்க வேண்டும். அலுவலகத்தில் பலருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தாலும் அந்த அலுவலகமோ, கட்டிடமோ 48 மணி நேரம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும். மீண்டும் அலுவலகம் செயல்பட தகுதியாகும் வரை கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: