புதுச்சேரியில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பா...!! ஜூன் 30ல் முடிவு செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முழு முடக்கத்தை நீட்டிப்பது பற்றி ஜூன் 30ல் முடிவு செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உத்தரவு, அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலை தடுக்க சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதுச்சேரியிலும், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. பெட்ரோல் பங்குகள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், மதுக்கடைகள் போன்றவை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன. கடற்கரை மூடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 2-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் இதே நிலையில் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ‘புதுவையில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து 30ம் தேதி முடிவு செய்யப்படும். மத்திய அரசின் உத்தரவு மற்றும் அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவைப் பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணத்திற்கு போலீசாரின் மெத்தனப் போக்கே காரணம். போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டுமே தவிர உயிரை எடுக்கக் கூடாது. மீனவர்கள் போராட்டம் நடத்தியதற்கு ஆளுநர் கிரண் பேடியே முக்கிய காரணம் என்றும் முதல்வர் குற்றம்சாட்டினார்.

Related Stories: