குற்றவாளிகளை கைது செய்யும்போது உடல் ரீதியாக தொடாமல் இருக்க வேண்டும்: போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி திரிபாதி அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களில் தந்தை 22ம் தேதியும் மகன் 23ம் தேதியும் மருத்துவமனையில் இறந்துள்ளனர். அவர்கள் இருவரும் போலீசார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும், சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற கைதிகளை தனிமை முகாமுக்கு அனுப்ப போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் காவல் துறைக்கு கடினமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கைது  செய்யப்படும் குற்றவாளிகளை வைப்பதற்காக உரிய வசதிகளுடன் கூடிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த இடங்களை துணை நிலையங்களாக பயன்படுத்த வேண்டும். உரிய இடம் கிடைக்கவில்லை என்றால் உதவி கமிஷனர்கள், டிஎஸ்பிக்கள் வீட்டிலிருந்து பணி செய்யலாம், அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களிலிருந்து பணிகளை மேற்கொள்ளலாம். இந்த தற்காலிக கட்டிடங்களில் ஒரு இன்ஸ்பெக்டர் அந்தஸ்து அதிகாரியை உதவி கமிஷனர்கள் நியமிக்க வேண்டும். காவல் துறையினர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதற்காக போலீஸ் கமிஷனர், எஸ்பிக்கள், உதவி கமிஷனர்கள், டிஎஸ்பிக்கள் இதுதொடர்பாக உரிய ஏற்பாடுகளை செய்து அதை சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு நீதிமன்றத்தால் அனுப்பப்படும்போது குற்றவாளிகள் சிறைக்கு செல்லும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.குற்றவாளிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் செல்லும் போலீசார் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அந்த காவலர்கள் தனிமைப்படும் நிலையில் அந்த காவல் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும்.குற்றவாளிகளை வைக்கும் மையங்களில் அனைத்து விதமான தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கைது நடவடிக்கையை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீனில்  வெளிவரக்கூடிய குற்றத்தில் ஈடுபடுபவர்களை காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்க வேண்டும்.ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது நடவடிக்கையில் ஈடுபடும்போது குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும். அப்போது, அவர்கள் முழு உடல் கவச உடை அணிந்திருக்க வேண்டும். முடிந்தவரை குற்றவாளிகளை தொடாமல் இருத்தல் அவசியம். போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்கள் இந்த உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: