ஒரே அறையில் 2 பேர், அடிப்படை வசதி இல்லை; குமரியில் கொரோனா பரப்பும் மையமாக தனிமை முகாம்கள்: வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் அச்சம்

நாகர்கோவில்: குமரிக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் ேபாதிய அடிப்படை வசதியின்றியும், ஒரே அறையில் இருவர் தங்க வைக்கப்படுவதாலும் அச்சம் அடைந்துள்ளனர். குமரியில் கொரோனா தொற்றை பரவவிடாமல் தடுக்கும் வகையில், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இ பாஸ் பெற்று வருபவர்கள் மாவட்ட எல்லைகள் மற்றும் ரயில் நிலையங்களில் பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் சிகப்பு மண்டலங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்து, தனிமை முகாமில் தங்க வைத்து பின்னர் அனுப்புகின்றனர்.

இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. ஒரே அறையில் இருவரும், ஒரே கழிவறையை பலரும் பயன்படுத்த வேண்டி இருப்பதாகவும், தனிமைப்படுத்த அழைத்து வரும்போது வாகனங்களில் போதிய இடைவெளியின்றி அழைத்து வரப்படுவதாகவும் கூறப்படுகிறது. நாவல்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் துபாயில் இருந்து வந்த தெற்கு சூரங்குடியை சேர்ந்த வாலிபர் ஒரு வாரம் இருக்க வேண்டும் எனக்கூறி தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரை மற்றொரு நபருடன் சேர்ந்து ஒரே அறையில் தங்க வைத்துள்ளனர்.

மேலும், அறை எண்கள் வாரியாக கழிவறை ஒதுக்கப்பட்டாலும், அனைவருமே ஒரே கழிவறையை பயன்படுத்தி வருவதால், அதிர்ச்சி அடைந்த வாலிபர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். மேலும், தங்குவதற்கு பணம் செலுத்த தயாராக உள்ளேன். தனியாக அறை வேண்டும் எனக்கேட்டுள்ளார். ஆனால், அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதுபற்றி அந்த வாலிபர் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து வரும்போது, உரிய பாதுகாப்பு கருதி ஸ்டேட்ஸ் பிளைட்டில் கூடுதல்கட்டணம் செலுத்தி வந்தேன். உரிய பரிசோதனை மேற்கொண்டு வீட்டு தனிமை சான்று வழங்கினர். படந்தாலுமூட்டில் பரிசோதனை செய்து, ஒரே பஸ்சில் 40 பேரை போதிய இடைவெளியின்றி ஏற்றினர்.

இதுபற்றி கேட்டபோது அதிகாரிகள் மிரட்டும் பாணியில் பேசுகின்றனர். பின்னர், ஒரே அறையில் இருவரை தங்க வைத்தனர். ஒரே அறையில் இருக்கும்போது, தொற்று இருப்பவர் இருமினால், அதன் மூலம் தொற்று இல்லாதவார்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதுபோல், தொற்று அதிகம் உள்ள மும்பை மற்றும் சென்னையை சேர்ந்தவர்களையும், ஒரே பிளாக்கில் தங்க வைக்கின்றனர். இதில் பலரும் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை. முககவசங்கள் மற்றும் குப்பைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள குப்பை கூடையில் போடாமல், மாடியில் இருந்து வீசுகின்றனர். இங்கு பலத்த காற்று வீசுவதால் அந்த குப்பைகள், பயன்படுத்திய முககவசங்கள் கீழே உள்ள அறைகளுக்குள்ளும் வந்து விழுகின்றன.

இதுபோல் பொதுக்கழிவறை என்பதால் தொற்று உள்ளவர்கள் சளியை உமிழ்ந்திருந்தாலோ, பைப்களில் இருந்தாலோ அது மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி இங்குள்ளஅதிகாரிகளிடம் கூறினால், நாங்கள் உள்ளே வரமுடியாது, பிற மாவட்டங்களில் பள்ளிகளில் தங்க வைத்துள்ளனர், இங்குதான் கல்லூரி என கூறுகின்றனர். ஆர்டிஓவிடம் புகார் அளித்தும் பலனில்லை. தனிமைப்படுத்தல் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், அதுவே நோய் பரப்பும் இடமாக மாறிவிடக்கூடாது. மேலும் தங்குவதற்கு கட்டண அறைகளை உரிய வசதிகளுடன் வழங்கினால், அதற்கு கட்டணம் செலுத்தி தங்க தயாராக உள்ளோம் என்றார்.

கட்டண அறைக்கு பரிசீலிக்கலாம்

தனியாக வருபவர்கள் மட்டுமின்றி குடும்பமாக வருபவர்களும் கல்லூரி விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனால் சென்னை உள்பட இதர மாவட்டங்களில் தனிமைப்படுத்துவோர் தங்க தனியார் விடுதிகள் தேர்வு செய்து அதன் தரத்திற்கேற்ப அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், குமரியில் இலவச தங்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து தரப்பினரும் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனால், சிலர் தனிமையை, வசதியை விரும்புகின்றனர். அவர்களுக்கு தங்கும் விடுதியில் கட்டணம் செலுத்த அனுமதி அளித்தால், வருவாய் இல்லாத விடுதி தரப்பினரும், தனிமைப்படுத்தப்படுவோரும் பயன் பெறுவார்கள். இதனை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: