லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன நாட்டின் படைகள், வாகனங்கள் பின்வாங்கியதாக தகவல்!

லடாக்: லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 15, 16ம் தேதியில் இந்திய, சீன படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன ராணுவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதை வெளிப்படையாக அறிவிக்க சீன ராணுவம் மறுக்கிறது. ஆனால், சீன ராணுவம் தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன படையினர் அத்துமீறியதாக இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீனாவும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றன.

இதனிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் பதுங்கு குழிகள், டெண்ட் மற்றும் பிற கட்டமைப்புகளை அமைத்து அத்துமீற முயற்சித்ததை உறுதிபடுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் நேற்று வெளியாகின. இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டின் சில படைகள், வாகனங்கள் பின்வாங்கியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க சீன, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: