கொரோனாவை எப்படி தடுக்கலாம்?; தமிழக அரசுக்கு நடிகர் அஜித் கொடுத்த ஐடியா வெற்றி; #AJITHLedDroneToFightCorona ஹெஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 முதல் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்று பரவுதல் குறையவில்லை. எனவே ஊரடங்கை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் சுகாதாரத்துறையினர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் இது குறித்து ஒரு ஐடியாவை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக டாக்டர் கார்த்திகேயன் என்பவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் அஜித்தின் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா என்ற குழுவினர் அமைத்த ட்ரோன், இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பிடித்தது.

இந்த நிலையில் தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன் மூலம் தமிழகம் முழுவதும் குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள சிகப்பு மண்டல நகரங்களில் கிருமிநாசினியை தெளிக்கலாம் என்று அஜித் ஐடியா கொடுத்ததாகவும், இந்த ட்ரோன் வெறும் அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமி நாசினியை தெளித்துவிடும் தன்மை கொண்டது என்று அஜித் கூறியதாகவும் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, நடிகர் அஜித்குமார் கொடுத்த  ஐடியாவை ஏற்று, தற்போது 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினியை சுமந்து செல்லும் அளவுக்கு  ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 நிமிடத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கிருமி நாசினி தெளிக்கும் திறன் கொண்ட ட்ரோன் கொண்டு சென்னையில் நடத்தப்பட்ட இதன் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.  

ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தக்ஷா குழுவினர்களின் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளித்து வருவதாகவும் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் இந்த ஐடியா மூலம் கொரனோ மிக சீக்கிரம் தமிழகத்தில் ஒழியும் என்று அஜித் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும், நடிகர் அஜித்தின் இந்த ஐடியாவிற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக #AJITHLedDroneToFightCorona என்ற ஹெஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Related Stories: