மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர், போலீசார், திருவள்ளூர் எஸ்.பி 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மீஞ்சூர் டாஸ்மாக் கடை அருகே சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அடையாளம் தெரியாத நபரை தாக்கிய விவகாரம் திருவள்ளூர் எஸ்.பி 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மிஞ்சூரில் டாஸ்மாக் கடை அருகே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், சாதாரண உடை அணிந்த போலீஸ்காரர்கள் இருவரும் சேர்ந்து அங்கிருந்த ஒருவரை சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

மேலும் இது தொடர்பாக பத்திரிகைகளிலும் செய்தி வெளிவந்தது. அதில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதாகவும், அதை கண்டுகொள்ளாமல் இருக்க அந்த பகுதியைச் சேர்ந்த போலீஸ் காரர்களுக்கு டாஸ்மாக் கடை விற்பனையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாகவும், மேலும் அது குறித்து யாராவது கேள்வி கேட்டால் போலீசார் மூலம் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுவது போல் வீடியோ பதிவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு விசாரணை செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி 3 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: