வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சம்: ரூ37,000-த்தை தாண்டியது தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் 37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.392 அதிகரித்தது. கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பாடாய் படுத்துகிறது. இதோடு, தங்கம் விலையும் சேர்த்துக் கொண்டு, ஏற்கனவே மகிழ்ச்சியை துறந்த மக்களின் வாழ்க்கையில், சுப நிகழ்ச்சிகளையும் நடத்த விடாமல் கசக்கப் பிழிகிறது. கடைகள் மூடி இருந்தாலும், வாங்குவதற்கு ஆளில்லை என்றாலும் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து ஏறி கொண்டே இருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை ஒரு கிராம் ரூ.4,610க்கும், சவரன் ரூ.36,880க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், நேற்று கிராமுக்கு ரூ. 49 அதிகரித்து, ஒரு கிராம்  ரூ.4,659க்கும்,  சவரனுக்கு ரூ.392  அதிகரித்து, சவரன் ரூ.37,272க்கும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  ஜனவரி முதல் கடந்த 6 மாதத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.924ம், சவரனுக்கு ரூ.7,392ம் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,735க்கு விற்கப்பட்டது.

Related Stories: