மின்வாரிய ஊழியரை தாக்கிய விவகாரம்; இ-பாஸ் தொடர்பாக போலீசாருக்கு டிஜிபி தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மின்வாரிய ஊழியரை தாக்கிய விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி 4 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் தொடர்பாக தமிழக டிஜிபி காவல் துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம்  செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தினர் அப்பகுதியில் சோதனை சாவடி அமைத்து, ஆவடி நோக்கி சென்னைக்கு வருபவர்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 21ம் தேதி காலை திருவள்ளூரில் இருந்து ஆவடி நோக்கி இருசக்கரவாகனத்தில் வந்த மின்வாரிய ஊழியரிடம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இ-பாஸ் உள்ளதா?

என கேட்ட போது, அத்தியாவசிய சேவை பணியான மின்வாரியத்தில் இருப்பதாக கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதனை ஏற்க மறுத்த போலீசாரிடம் தன்னை வேலைக்கு செல்ல அனுமதிக்கும்படி கெஞ்சியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் ஒருவர் திடீரென மின்வாரிய ஊழியரை சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளார். அப்போது மின்வாரிய ஊழியர் போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்டும், அவரை அடித்து உதைத்து அதன்பிறகு  அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. மேலும் இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்தது. அந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்பு தலைவர் துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய பணியான மின்வாரிய பணியாளர் அடையாள அட்டை காண்பித்தும் அவரிடம் காவல் துறையினர் எப்படி இ-பாஸ் கேட்கலாம்? காவல்துறையினரின் செயல் மனித உரிமை மீறல் செயல் ஆகாதா? காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இ-பாஸ் விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கும்படி தமிழக டிஜிபிக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: