அக்டோபரில் கொரோனா உச்சம் அடையும்: மருத்துவ பல்கலை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

* தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு

* உயிர் பலி 4 மடங்கு வரை உயரும்

* ஜூலை மத்தியில் 2.75 லட்சம் பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபரில் உச்சத்தை அடையும்  என்றும், ஜூலை மத்தியில் 2.75 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட  வாய்ப்பு இருப்பதாகவும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்  தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த  கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த ஊரடங்கையொட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததன்  விளைவாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனாவால் தினசரி  1200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக  சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 30ம்  தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில்  வசிக்கும் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க  தொடங்கியுள்ளனர். இதனால், தற்போது சென்னை மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும்  கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மதுரையில் 30ம் தேதி  வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில்  ஊரடங்கை அமல்படுத்துவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில்,  ஜூலை 15ம் தேதி மாநிலம் முழுவதும் 2.75 லட்சம் பேர் ெகாரோனா தொற்றால்  பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய  ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வில் கூறியிருப்பதாவது: ஜூலை 15ம் தேதியன்று தமிழகத்தில் 2.75 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களில் 60 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக  இருப்பார்கள். ஜூன் இறுதியில் சென்னையில் 71 ஆயிரம் பேரும், மாநிலம் முழுவதும் 1.2 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  சென்னையில் ஜூலை 15ம் தேதிக்கு பிறகு 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சென்னையில் கொரோனா மரணங்கள் இரண்டு மடங்கு அதிகரித்து ஜூலை 15ம் தேதி வரை 1,600 பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் நான்கு மடங்கு உயிர்பலி அதிகரிக்கும். 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கொரோனா பாதிப்பு அக்டோபரில்  உச்சத்தை அடைந்து அதன்பிறகு தான் குறையும். ஆனால், கொரோனா பாதிப்பு எப்போது முழுமையாக குறையும் என்பது பொதுமக்கள் பின்பற்றும் வழிமுறைகளை வைத்துதான் சொல்ல முடியும். அதை தற்போது கணிக்க முடியாது. பொதுமக்கள் மாஸ்க் அணிவது,  சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கை கழுவுவது போன்றவற்றை முறையாக பின்பற்றுவதை பொறுத்துத்தான் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

* சென்னையில் ஜூலை 15ம் தேதிக்கு பிறகு  1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

* சென்னையில் ஜூலை  15ம் தேதி வரை 1,600 பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது.

* தமிழகத்தை பொறுத்தவரை 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Stories: