PM CARES-ல் தமிழகத்திற்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு; 50,000 வென்டிலேட்டர்கள் இந்தியாவிலேயே தயாரிப்பு...பிரதமர் அலுவலகம் விளக்கம்..!!

டெல்லி: பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்காக ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான  இந்தியாவின் போருக்கு நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் விருப்பம் தெரிவித்தனர். அந்த உணர்வை மதிக்கும் வகையில், குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த PM-CARES நிதியத்திற்கு  பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டார். இதனை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினர், PM-CARES  நிதியத்திற்கு பணம் செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நிவாரணம் பெற பிரதமர் நரேந்திர மோடி புதிய கணக்கை தொடங்கியது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக, RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ்  பதிலளிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது எனக் கூறப்பட்டது. மக்களிடம் இருந்து  பெறப்படும் நிதி சம்பந்தமான விஷயங்களில் வெளிப்படை தன்மை தேவைப்படுகிறது எனவும் இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கான சிறப்பு நிதியான பி.எம்.கேர்ஸ் மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக பி.எம்.கேர்ஸ்  நிதியிலிருந்து ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 1340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் / யூ.டி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா (275), டெல்லி  (275), குஜராத் (175), பீகார் (100), கர்நாடகா (90), ராஜஸ்தான் (75) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 14,000 வென்டிலேட்டர்கள் மாநிலங்கள் / யூ.டி.க்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக தமிழ்நாட்டுக்காக ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், மகாராஷ்டிரா ரூ.181 கோடி உத்திரப்பிரதேசம் ரூ.103 கோடி, குஜராத் ரூ.66 கோடி, டெல்லி ரூ.55 கோடி, மேற்கு வங்கம் ரூ.53  கோடி, பீகார் ரூ.51 கோடி, மத்திய பிரதேசம் ரூ.50 கோடி, ராஜஸ்தான் ரூ.50 கோடி, கர்நாடகா ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கில் கொண்டு 50% நிதியும், கொரோனா பாதிப்பு அதிகம் கணக்கில் கொண்டும் 40  % நிதியும், அனைத்து மாநில அரசுகளுக்கும் 10% நிதி வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. பிஎம் கேர்ஸ் நிதியில் எவ்வளவு வசூலானது போன்ற விவரத்தை வெளியிட மறுத்த நிலையில் தகவல்  வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: