வீடு வீடாக சென்று பரிசோதனை; சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன...மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி..!!

சென்னை: 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனாவின் தாக்கம் மேலும் வேகம் எடுத்துள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19-ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு  தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் பல வழிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் நடைபெறுவதை மக்களுக்கு தெரிவிக்க பல்வேறு வழிகளை கையாளுகிறோம் என்றார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற மருத்துவ முகாம்கள் மூலம் 36,071 பேர் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்கள் மற்றும் வீடு வீடாக சென்று பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர hQIMS-FOCUS VOLUNTEER என்ற புதிய திட்டத்தை தொடங்கவுள்ளோம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு ஒரு தன்னார்வலரை நியமித்து தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

Related Stories: