மாதவரம் தற்காலிக பழ மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பு: போலீசார் தடியடியால் பரபரப்பு

சென்னை:  சமூக இடைவெளி பிரச்னையால் மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள தற்காலிக பழ மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து போலீசாரிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவலை தடுக்க கோயம்பேட்டில் இயங்கி வந்த பழ மார்க்கெட், கடந்த  சில தினங்களுக்கு முன்பு மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இங்கு தற்போது பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், சமூக இடைவெளியை காரணம் காட்டி, இந்த பழ மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.  சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு சில்லறை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில் நேற்று காலை பழங்கள் வாங்குவதற்கு இங்கு வந்த சில்லறை வியாபாரிகளை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சில்லறை வியாபாரிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போராட்டம் செய்தாலோ கூட்டமாக ஒன்று கூடினாலும் கைது நடவடிக்கை எடுப்போம் என போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து சில்லறை வியாபாரிகள் கூறுகையில், மாதவரம் பேருந்து நிலையத்தில் உள்ள பழ மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு போலீசார் மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். பழங்களை வாங்க வரும் மொத்த வியாபாரிகள் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும், சங்கத்தின் அனுமதி சீட்டு வாங்கி வரவேண்டும் என்று கூறி உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். மேலும் சில்லறை வியாபாரிகளையும் உள்ளே அனுமதிக்காததால் வியாபாரம் செய்ய முடியவில்லை. இதனால் கடந்த இரு நாட்களில் பல கோடி ரூபாய் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து பழ வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையான வரைமுறையை சிஎம்டிஏ அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: