கடினமான சூழலில் இந்தியா-சீனா; இரு நாடுகளுடனான எல்லை பிரச்சனையை தீர்க்க முயற்சித்து வருகிறோம்...அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி...!!

வாஷிங்டன்: எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு  நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை  தொடர்ந்து, சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய   ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா - சீனா ராணுவம் இடையேயான   மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன. இந்தியா மற்றும் சீனாவுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.  மிகப்பெரும் பிரச்சினையை அவர்கள் கொண்டுள்ளனர். என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போம். பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர உதவுவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்றார். முன்னதாக, அதிபர் டிரம்ப், இந்தியா-சீனா எல்லை  பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என தெரிவித்ததற்கு இரு நாடுகளும் அதனை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: