துயரத்திலும் ஆறுதல்...! இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 54.13% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு பொதுமக்களிடையே தீவிரமுடன் பரவி வருகிறது.  இவற்றை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.  ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14,516 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 12,948 பேர் உயிரிழந்த நிலையில் 2,13,831 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124,331 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5893 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 62,773 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 54,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 666 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30,271 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 53,116 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2035 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 23,569 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 54.13% ஆக இன்று உயர்ந்து உள்ளது.  இது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். இதனை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories: