ஒற்றையாக சுற்றும் மக்னா யானை: நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கேமரா

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் ஒற்றையாக சுற்றும் மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கேமராக்களை பொருத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.தேவாரம் மலையடிவாரத்தில் ஒற்றையாக சுற்றக்கூடிய மக்னா யானை இதுவரை 11 பேரை கொன்றுள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தனது முழு ஆக்ரோசத்தை காட்டி மனித உயிர்களை பலி வாங்குவதுடன், தென்னை, நிலக்கடலை, சொட்டு நீர் பாசன குழாய்கள், முள்வேலிகள் போன்றவற்றை அடித்து துவம்சம் செய்யும். இதனை பிடிக்க வேண்டும் என பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.கடந்த 4 தினங்களுக்கு முன்பு கூட சாக்குலூத்து மெட்டு வனப்பாதை வழியே சென்ற இரண்டு பேரை விரட்டியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தினந்தோறும் வனத்துறை மற்றும் பேரூராட்சி சார்பில் மாலை 5 மணிக்கு மேல் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள காடுகளுக்கு செல்லவேண்டாம் என மைக் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்ணைப்புரம், தேவாரம் சாக்குலூத்து உள்ளிட்ட இடங்களில் அடிவாரத்தை ஒட்டி நடமாடி வரும் மக்னா யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து வனத்துறை யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களாக 5 இடங்களை கண்டறிந்துள்ளது. இந்த இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது. இதனை கோம்பை மற்றும் தேவாரத்தில் இருந்து கண்காணிக்கவும், விவசாயிகளுக்கு யானைகள் நடமாடும் இடங்களை பற்றி உடனடியாக மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ், அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மனித உயிர்களை பாதுகாக்கவும், பயிர்கள் சேதம் அடையாமல் தடுக்கவும் முடியும் என வனத்துறை நம்புகிறது. விவசாயிகள் கூறுகையில், ‘எதுவுமே தற்காலிக நடவடிக்கைகளால் தீர்வு ஏற்படப்போவதில்லை. ஒற்றை மக்னா யானையை மட்டும் பிடித்து வேறு காடுகளுக்கு அனுப்புவதில் இவர்களுக்கு என்ன சிக்கல் என தெரியவில்லை’ என்றனர்.

Related Stories: