தனியார் செல்போன் கம்பெனியில் முன் அறிவிப்பு இல்லாமல் 300 தொழிலாளர்கள் பணி நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு : தனியார் நிறுவனத்தில் வேலை செய்த 300 ஊழியர்களை, எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்தனர். இதனால், அவர்கள்  தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அடுத்த பரனூரில்  மகேந்திரா சிட்டி இயங்குகிறது. இந்த தொழிற்பேட்டையில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 2000 க்கும் மேற்பட்டோர் வேல செய்கின்றனர். இந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், திடிரென 300 தொழிலாளர்களை, நேற்று முன்தினம் கம்பெனி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. மேலும் அவர்களுக்கு முழு சம்பளம் தராமல், அதில் பாதி தொகை தருவதாக கூறியதாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அனைத்து  பணியாளர்களும், தொழிற்சாலை முன்பு திரண்டு, கையில் செல்போன் டார்ச் லைட் வைத்து நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து  தொழிலாளர்கள் கூறுகையில், முழு ஊரடங்கு நேரத்தில் திருச்சி, தின்டுக்கல், மதுரை, திருநெல்வேலி பகுதியில் இருந்து இங்கு வந்து கம்பெனியிலேயே தங்கி பணியாற்றிய எங்களை, திடீரென பணியில் இருந்து நீக்கினால், பணம் இல்லாமலும், ஊருக்கு போக முடியாமலும் தவிக்கிறோம். எனவே, எங்கள் அனைவரையும் இதே கம்பெனியில் நிரந்தரமாக பணியமர்த்தி முறையான சம்பளம் வழங்க வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து, இரவு சுமார் 11 மணியளவில் செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரசம் பேசினார். அப்போது, ஊரடங்கு தளர்வு ஏற்பட்ட பின்னர், நிர்வாகத்திடம் பேசி, அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: