கலெக்டர் கூட்டத்தில் பங்கேற்ற குன்றத்தூர் தாசில்தாருக்கு கொரோனா பாதிப்பு: அதிகாரிகள் கடும் பீதி

குன்றத்தூர் : கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட  தாசில்தாருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால், அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, குன்றத்தூர் தாலுகா புதிதாக உதயமானது. அதன் முதல் வட்டாட்சியராக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெயசித்ரா (52) பணியமர்த்தப்பட்டார். பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களை பெற்று, பணிகளை உடனுக்குடன் முடித்து வந்ததால், இவர் நன்மதிப்பை பெற்றார்.

தற்போது ஏற்பட்டுள்ள, கொரோனா பாதிப்பு காலத்திலும், தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை இரவு, பகல் பாராமல் திறம்பட செய்து வந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரிகளாக முனைவர் சுப்பிரமணியன், காவல்துறை டிஐஜி பவானீஸ்வரி ஆகியோரை நியமித்தது.

இந்த சிறப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவுடன், குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை கடைபிடிப்பது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதற்கான கலந்தாய்வு கூட்டம் குன்றத்தூரில் நடந்தது. இதில் குன்றத்தூர் தாசில்தார் ஜெயசித்ரா கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று காலை தாசில்தார் ஜெயசித்ராவுக்கு, திடீரென தொடர் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது, அவரு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஸ்ரீ பெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் ஜெயசித்ரா கலந்து கொண்டதால், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உயரதிகாரிகள் பலர் தற்போது பீதியில் உள்ளனர்.  

குன்றத்தூர், மாங்காடு பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தாசில்தாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே மேலும் கலக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: