சத்தம் இல்லாமல் முடங்கிய இரும்பு தகர தொழில்: நிவாரணம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

பண்ருட்டி: பண்ருட்டி-சேலம் மெயின்ரோட்டில் இரும்பு தகரத்திலான பொருட்கள் செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. கடந்த 50 ஆண்டிற்கும் மேலாக இதே பகுதியில் 50க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் இயங்கி வருகிறது. 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 500 குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்திற்கு தேவையான அரிசி மற்றும் உளுந்து சல்லடை, மணிலா மரக்கா, மணிலா அளப்பதற்கான படி, திருமணத்திற்கு சாதம் வடிக்கும் குடம், சல்லிகரண்டி, மண்வெட்டி, குப்பை அள்ளும் கருவி, கழிவுகள் அகற்றும் கருவி, பூச்செடிகள் தண்ணீர் தெளிப்பு டப்பா, விவசாய நிலங்களில் பயன்படுத்தும் மோட்டார்கள் மூடும் கவர் பெட்டிகள், விடுதி மாணவர்கள் பயன்படுத்தும் டிரங்க் பெட்டி, வாளி, கட்டிடம் கட்ட தேவையான பாண்டு, எலி பிடிக்கும் பெட்டிகள், சாம்பிராணி கரண்டி, தேங்காய் துருவல் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

 எப்போதுமே இப்பகுதியில் கலாய் இரும்பு தகடுகளை மர சுத்தியால் சீர் செய்யும் பணி நடைபெறும். இதனால் இந்த சாலையில் செல்லும் போது சத்தமாகவே இருக்கும். இதற்கு தேவையான கலாய் தகடுகள் சென்னை, புதுச்சேரியில் இருந்து வாங்கி இந்த தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனாவால் தொழில் செய்ய முடியாமல், இத்தொழில் சத்தமில்லாமல் முடங்கி உள்ளது. பள்ளிகள் திறந்தால் ஏராளமான பெட்டிகள் விற்பனையாகும். இப்போது அதற்கும் வழியில்லாமல் உள்ளது. இப்படி பல்வேறு விதங்களில் தொழில் பாதித்து, தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அரசும் எவ்வித நிவாரண உதவியும் தரவில்லை.

 கலாய் இரும்பு தகடுகள் இருந்தால் மட்டுமே இவர்களது வாழ்வாதாரம் உயரும். உடல் உழைப்பு அதிகளவு தேவைப்படும் இந்த தொழில் குடிசை தொழிலாகவே இருந்து வருகிறது. வங்கிகளும் கடன் அளிப்பதற்கு முன்வருவதில்லை. மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக இந்த தொழிலை செய்து வரும் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்க்கையில், முன்னேற்றமே காணாமல் உள்ளனர்.

‘பழைய நிலைக்கு வர பல மாதங்கள் ஆகும்’

 இரும்பு தகர தொழில் செய்து வரும் வேலு கூறுகையில், பொருட்களை நாங்களே தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். தினந்தோறும் விற்பனை நடந்தால் மட்டுமே எங்கள் வயிறு நிறையும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும். ரூ.1000க்கு விற்பனை நடந்தால் மட்டுமே கடை வாடகை, ஆள் கூலி ஆகியவை போக வரும் சொற்ப லாபத்திலேயே இந்த தொழிலை நடத்தி வருகிறோம். கொரோனா தொற்று ஏற்பட்டு ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், மார்ச் முதல் ஜூன் வரை எந்த பொருளும் விற்பனையின்றி தொழில் முடங்கி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம்.

தமிழக அரசு இதுபோன்ற தொழிலை ஊக்குவித்தால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை அடியோடு ஒழிக்கலாம். கொரோனா நேரத்தில் ஒருவரும் எங்களுக்கு நிவாரணம் வழங்க முன்வரவில்லை. சென்னை மற்றும் புதுச்சேரியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மூலப்பொருளான இரும்பு கலாய் தகடுகள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக உள்ளூரில் கிடைக்கும் குறைந்த அளவு தகடுகளை கொண்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து ஒருவேளை கஞ்சி குடித்து வருகிறோம். கொரோனாவால் தொழிலும் அழிந்தது, வாழ்வாதாரமும் அழிந்தது. மீண்டும் பழைய நிலைக்கு வர பல மாதங்கள் ஆகும். தமிழக அரசு இந்த தொழில் மீது அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், என்றார்.

Related Stories: