தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவகாற்றோடு வெப்பசலனமும் மழை பெய்ய காரணம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கில் இருந்து தரைக்காற்று வெப்பமாக வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , வேலூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரேன் ஹீட் அளவு எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரத்தில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்.

ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இரவில் புழுக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7 செ. மீ அளவு வரை மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வால்பாறையில் 6 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ மழையும், சோலையாரில் 4 செ.மீ மழையும், தேனி மாவட்டம் பெரியாறு, புதுக்கோட்டை மாவட்டம் குடியியான்மலையில் 3 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: