வங்கிக் கடன் ஒத்திவைப்பு கால வட்டி விவகாரம்; EMI வசூலிப்பது தொடர்பாக வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வங்கி கடனாளர்கள் ஈ.எம்.ஐ செலுத்தும் விவகாரத்தில் வங்கிகளுக்கு சரியாக அறிவுறுத்தல்களை வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 27ல் புதிய சலுகை ஒன்றை அறிவித்தது. அதன்படி வங்கியில் கடன் பெற்றவர்கள் கடந்த மார்ச் முதல் மே வரையில் 3 மாதம் தவணையை காலம் தாழ்த்தி செலுத்தலாம் என தெரிவித்தது. கடன் தவணைகளை திருப்பிச் செலுத்தாத இந்த காலம் சிபிலில் சேர்க்கப்படாது எனவும் கூறப்பட்டது. இதனால் வங்கிகளில் கடன் பெற்ற பலரும் தவணை ஒத்திவைப்பு சலுகையை பயன்படுத்தினர்.

ஆனால் வங்கிகளோ, தவனை ஒத்திவைப்பு காலத்துக்கும் ஒரு வட்டியை வசூலிப்போம் என நடவடிக்கை மேற்கொண்டது. இது வங்கி கடன் பெற்றவர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், கடன்களுக்கு தவணை மற்றும் வட்டி செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிடவில்லை. ஆனால் தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கும் வட்டி விதிக்கப்பட்டுள்ளதுதான் கவலை அளிக்கிறது என்றனர். மேலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, கொரோனா பாதிப்பு காலத்தில், வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின் போது, அப்போது எஸ்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ,ஏறக்குறைய 90% கடனாளர்கள் ஈஎம்ஐ செலுத்துவதற்கான கால அவகாச சலுகையை பெறவில்லை. ஊரடங்கு காலத்தில் தங்கள் ஈ.எம்.ஐ.களை தவறாமல் செலுத்துகின்றனர் எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தவணை உரிமை காலத்தை மத்திய அரசு அறிவித்திருந்தால் அதனுடைய பலன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்திருக்கலாம் என்றும் ஆனால் இந்த விவகாரம் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான பிரச்னை என மத்திய அரசு நழுவுவதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தை வங்கிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வட்டி வசூலிக்கும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் வங்கிகளுக்கு சரியாக மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஊடங்கின் போது கடினமான நேரங்களை எதிர்கொண்ட கடன் வாங்கியவர்களுக்கு உதவுவதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று சுட்டிக்காட்டியதோடு வழக்கின் விசாரணையை 3 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: