கொரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிப்பதில் நல்ல பலன் கிடைத்துள்ளது : எய்ம்ஸ் மருத்துவர்கள்!!

டெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிப்பதில் நல்ல பலன் கிடைப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரேடியேஷன் ஆன்காலஜி எனப்படும் கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் மையம் அமைந்துள்ளது. இந்தத் துறையின் தலைவர் டாக்டர் டி.என்.ஷர்மா கொரோனா நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையை பரிந்துரைத்ததன் பேரில், 50 வயதுக்கும் அதிகமான இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இது தொடர்பாக டாக்டர் டி.என்.ஷர்மா கூறுகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்த அதிக அளவிலான கதிர்வீச்சுகள் பயன்படுத்தப்படும். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு குறைந்த அளவிலான கதிர்வீச்சுகளே போதும். இந்த மொத்த சிகிச்சை நடைமுறைக்கும் 15 முதல் 20 நிமிடங்களே தேவைப்படும்.

1940 ஆண்டுவரை நிமோனியா நோய்க்கான நோய் எதிர்ப்பு புரதங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நேரத்தில் கதிர்வீச்சு மூலம் அதன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நடைமுறையையே தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆராய்ச்சியில் மேலும் எட்டு கொரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை பலனளிக்கும் பட்சத்தில் இந்த ஆராய்ச்சி திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும், என்றார்.

Related Stories: