காட்டு யானை தாக்கி இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் வந்தார்: தேவாரம் அருகே பரபரப்பு

தேவாரம்: தேவாரம் அருகே காட்டு யானை தாக்கியதில் இறந்ததாக கருதப்பட்ட தொழிலாளி, உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி(60). விவசாயி. கேரள மாநிலம், உடும்பஞ்சோலையில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். வருசநாடு அருகே பொன்னன்படுகையை சேர்ந்தவர் ராஜாங்கம்(58). கூலித்தொழிலாளி. நேற்றுமுன்தினம் மாலை இருவரும் சாக்குலூத்து வனப்பகுதி வழியாக கேரளாவிற்கு கிளம்பினர். மாலை 5 மணியளவில் கேரள மாநில எல்லையில் உள்ள உடும்பஞ்சோலையை நெருங்கியபோது, அப்பகுதியில் உள்ள செக்போஸ்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருப்பதை கண்டனர். இதனால் இருட்டிய பின்னர் வனப்பகுதியிலிருந்து வெளியேறலாம் என அப்பகுதியிலேயே 2 பேரும் பதுங்கிக் கொண்டனர். இரவு 7 மணியளவில் திடீரென அங்கு வந்த காட்டு யானை, இருவரையும் தாக்க முயன்றது. யானையின் பிடியிலிருந்து முனியாண்டி தப்பியோடி விட்டார். ராஜாங்கம் அருகில் உள்ள புதருக்குள் ஒளிந்து கொண்டார்.

யானை அங்கிருந்து சென்ற பின் ராஜாங்கத்தை, முனியாண்டி நீண்ட நேரம் தேடினார். ஆனால் ராஜாங்கத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் உயிரிழந்திருக்கலாமோ எனக்கருதி, நடந்த சம்பவம் குறித்து செக்போஸ்ட்டில் பணியிலிருந்த கேரள போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து தேவாரம் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் மாயமான ராஜாங்கத்தை தேடி சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் வனத்துறை ரேஞ்சர் தினேஷ் மற்றும் வனத்துறையினர் கிளம்பினர். இதற்கிடையே இரவு 10 மணியளவில் வனத்துறையினரை தொடர்பு கொண்ட ராஜாங்கம், தான் காட்டு யானையிடமிருந்து தப்பி விட்டதாகவும், தற்போது உடும்பஞ்சோலை செக்போஸ்ட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன்பேரில் இரவு 12 மணியளவில் உடும்பஞ்சோலைக்கு சென்ற வனத்துறையினர் முனியாண்டி, ராஜாங்கம் ஆகியோரை மீட்டு கோம்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுயானை தாக்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட தொழிலாளி உயிர் தப்பிய சம்பவம் தேவாரம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: