வெவ்வேறு இடங்களில் வாகன விபத்து கிராம நிர்வாக உதவியாளர் உள்பட 2 பேர் பரிதாப பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் பகுதியில், பைக் மீது டிப்பர் லாரி மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலியானார். காஞ்சிபுரம் அடுத்த சிறுவேடல் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (42). கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் மோகன்தாஸ், அலுவலக பணியாக தனது பைக்கில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் புறப்பட்டார். கோனேரிக்குப்பம் துர்க்கை அம்மன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை கண்டதும், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும்  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், டிப்பர் லாரி சென்னை துறைமுகத்தில் இருந்து மலேசிய மணலை ஏற்றி கொண்டு தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீ ராணிப்பேட்டை மாவட்டம் ராமாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (20). பிளஸ் 2 முடித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூா் அருகே, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் பாஸ்கர், தனது தாயுடன் ராணிப்பேட்டைக்கு பைக்கில் புறப்பட்டார். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, பைக் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது தாய் படுகாயமடைந்தார். தகவலறிந்து பாலுசெட்டிசத்திரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், அவரது தாயை சிகிச்சைக்காகவும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையில் போலீசார், வாலாஜா சுங்கச்சாவடிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரியை, அங்கிருந்த போலீசார் மறித்து நிறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த டிரைவர் பாலாஜி (25) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: