சிங்கப்பூரிலிருந்து திருப்பூருக்கு வந்த டிக்-டாக் ரவுடி பேபியை சூழ்ந்த மக்கள்

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிப்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் நால்ரோடு சபரிநகரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற சூர்யா. இவர் டிக்-டாக் மூலம் பிரபலமானவர். டிக்-டாக்கில் இவரது சேட்டைகள் காரணமாக ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றுள்ளார். கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அங்கேயே இருந்து விட்டார். தற்போது சிறப்பு விமானத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்றுகூறி சூர்யா வீட்டை சூழ்ந்தனர். தகவலின்பேரில், போலீசாரும், சுகாதாரத்துறையினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம், நான் சிங்கப்பூரில் ஏசி அறையிலேயே இருந்துவிட்டேன். இங்கு வெயிலில் அதிகமாக உள்ளது. இவர்களிடமிருந்து எனக்கு கொரோனா பரவி விடுமோ என பயமாக உள்ளது. அரசு மருத்துவமனையில் உணவுடன் தனி அறை வேண்டும். இல்லை என்றால் பிரச்னை செய்வேன் என சூர்யா கூறியுள்ளார். பின்னர் சூர்யாவை கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

Related Stories: