கொரோனா பாதிப்பு எதிரொலி; புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பல மாவட்டங்களில் மாணவர்களுக்கு நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் மாற்றியமைத்தும், சில தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டும் வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து என்ற தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளும் ரத்து என்ற அறிவிப்பை புதுவை பல்கலை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து என்றும், செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்பை தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களும் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் ஆறு மாதங்களுக்கு எந்தவித தேர்வையும் நடத்த முடியாத சூழல் இருப்பதாகவே கூறப்படுகிறது.

Related Stories: