லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சீன வீரர்கள்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரர் வீரமரணம்!!

டெல்லி: லடாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப்  பிரச்னை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அங்கு படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதன்படி, இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான  பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும்  ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டதையடுத்து சீன படைகள் இந்திய எல்லையில் இருந்து திரும்ப தொடங்கின. இந்நிலையில், லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா படைகளை திரும்பிக்  கொண்டிருந்தபோது இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எதற்காக? எப்படி? மோதல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

இதில், ஒருவர் அதிகாரி 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாகவும், இரு தரப்பிலும் உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த 3 வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி. 40 வயதான பழனி 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்த நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு 10 வயதில் மகனும் 8 வயதில் மகளும் உள்ளனர்.

ராணுவ வீரரின் உடல் நாளை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையியே லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த  ஆலோசனை கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து, எல்லை பிரச்சனை தொடர்பாக பிற்பகல் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Related Stories: