துன்ப நேரத்தில் கூடுதல் சுமை; பெட்ரோல், டீசல் விலையேற்றம் தேவையற்றது...பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்...!

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விலையேற்றம் என்பது நியாயப்படுத்த முடியாத மட்டுமல்லாமல் தேவையற்ற ஒன்று என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும்  டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும்  நிர்ணயிக்கின்றன.  கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ் சென்றது.

இருப்பினும், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக, ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10, டீசலுக்கு 13 என கலால் வரியை உயர்த்தியது. கடந்த 7ம் தேதியில்  இருந்து 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 10 நாளில் பெட்ரோல்  லிட்டருக்கு 4.82, டீசல் லிட்டருக்கு 4.95 அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா காரணமாக ஏற்கனவே மக்கள் நினைத்து பார்க்க முடியாத  துன்பத்தை அனுபவித்து வரும் நேரத்தில் கூடுதல் சுமையாக பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது நியாயப்படுத்த முடியாத மட்டுமல்லாமல் தேவையற்ற ஒன்று என்றும் இது போன்ற நேரத்தில் மக்களின் சுமையை குறைப்பதே  அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே அன்றி கூடுதல் சுமையை ஏற்றுவதல்ல என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு, சிறிய, பெரிய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, நடுத்தர மக்கள் , விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்துவதற்கான காரணம் புரியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தோராயமாக 9% சரிந்தும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

கடந்த 6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்தாலும் கலால் வரியை அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 258 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 820 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 18,00,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே விலையேற்றத்தை குறைத்து மக்கள்  பலனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக அவர்களது கைகளுக்கு பணம் சென்று சேரும்  வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: