நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை; 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் விளக்கம்...!

சென்னை: 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும், பிப். 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அரசு தீர்மானத்தில் வெற்றி பெற்றது. அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எடுப்பார். அவருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கடந்த பிப்.4ம் தேதி வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், திமுக தரப்பில் கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 3 மாதங்கள் கடந்துவிட்டது. சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மணிப்பூர் மாநில வழக்கு போன்று, இந்த மனுவையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசரமாக கருதி விசாரித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, அரசுக்கு எதிராக வாக்களித்தது குறித்து சபாநாயகர் தனபாலனுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்தான் தான் முதல்வராக பதிவியேற்றேன். இதன்பின்தான் கட்சி இரண்டாக பிரிந்தது. இருப்பினும், தேர்தல் ஆணையம் 2 பிரிவையும் ஒரு கட்சியாகதான் பார்த்தது. தற்போதும், தான் அதிமுகவில் உள்ளதால் தான் மீண்டும் ஒன்றிணைந்து முதல்வர் பழனிசாமிக்கு உறுதுணையாகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ளேன். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக தமக்கு கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தாம் எந்த சட்ட விதிகளையும் மீறவில்லை. தங்க தமிழ்செல்வன் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் விளக்கக்க கடிதம் மார்ச் மாதம் பெறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: