புயல் வேகத்தில் பாதிப்பு அதிகரிப்பு; வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 1,500 மருத்துவர்கள் அவசரமாக அழைப்பு...ஆம்புலன்ஸ்களும் வரவழைப்பு

சென்னை: வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 1,500 மருத்துவர்கள் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில், ஊரடங்கு நீடித்தாலும், கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியது. ஆனாலும், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் கூடி வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி சுமார் 1,500ஐ தாண்டும் நிலை ஏற்பட்டது.

மருத்துவ குழுவினரும், நோய் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் தளர்வுகளை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்ததையடுத்து, கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நாட்களில் வங்கிகள் 10 நாட்கள் மூடப்படும். கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்கப்படும். டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளான 21, 28ம் தேதிகளில் மக்கள் வெளியில் நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 1,500 மருத்துவர்கள் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் கொரோனா தாக்குவதால் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  பற்றாக்குறையை போக்க முதுநிலை மருத்துவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரையில் இருந்து 180 மருத்துவர்களும், கோவையில் இருந்து 63 பேரும் சென்னை வந்தனர். இதனைபோன்று மற்ற மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனைபோல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: