வந்தவாசி அருகே மின்வேலியில் சிக்கி பலியான மாற்றுத்திறனாளியின் சடலத்தை சுமந்து சென்ற பெண் இன்ஸ்பெக்டர்: கொரோனா பீதியில் பொதுமக்கள் தூக்க மறுப்பு

வந்தவாசி: வந்தவாசி அருகே கரும்பு தோட்டத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி மாற்றுத்திறனாளி பலியானார். அவரது சடலத்ைத கொரோனா பீதியால் பொதுமக்கள் தூக்குவதற்கு மறுத்த நிலையில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிச்சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எஸ்.நாவல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அமாவாசை(35), வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்தினம் மாலை ஏரிப்பட்டு கிராமத்தில் உள்ள சுதாகர் என்பவரது கரும்பு தோட்டம் வழியாக சென்றார். அங்கு காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக வைத்திருந்த மின்வேலியில் அமாவாசை சிக்கினார். இதில் மின்சாரம் பாய்ந்து அங்ேகயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை அவ்வழியாக சென்றவர்களின் தகவலின்படி தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர்  அல்லிராணி  சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் சடலத்தை அப்புறப்படுத்த உதவும்படி கேட்டார்.

ஆனால், அவர்கள் கொரோனா வைரஸ் பீதியால் சடலத்தை தூக்குவதற்கு தயக்கம் காட்டினர். அருகில் வரவும் முன்வரவில்லை. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அல்லிராணி, அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் சடலத்தை தூக்கி, ஆட்டோவில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொரோனா அச்சத்தால் ஊர் மக்களே தயக்கம் காட்டிய நிலையில், பெண் இன்ஸ்பெக்டர்  துளியும் கவலைப்படாமல் சடலத்ைத தூக்கிச்சென்றது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக கரும்பு தோட்ட உரிமையாளர் சுதாகரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: