செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தம் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள்: போக்குவரத்து நெரிசல்

சென்னை: கொரோனா அச்சத்தில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பைக்கில் சென்ற ஏராளமானோரை செங்கல்பட்டு சுங்கசாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.   சென்னையில் கொரோனா தொற்று காரணமாக 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 294 பேர் இறந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் இறந்துள்ளனர். இதனால் பீதியடைந்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள், உயிர் பயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல குடும்பம் குடும்பமாக பைக், கார், ஆட்டோக்களில் திருச்சி, விழுப்புரம், மதுரை, அரியலூர், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை நோக்கி நேற்று காலை முதல் சென்றனர். அவர்களை செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் சுங்கச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சோதனையில், இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ததாக 250 பைக்குகள், 2 கார்,  4 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனங்கள் அதிகமாக வந்ததால், அனைத்து வாகனங்களையும் போலீசார் திருப்பி சென்னைக்கே அனுப்பினர். இதனால் காலை முதல் மாலை வரை செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் சுங்கசாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘இவ்வளவு நாள் இல்லாமல் திடீரேன அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். ஒரு பக்கம் கொரோனா பயம். ஒரு பக்கம் பசி பட்டினி. மற்றொரு பக்கம் வேலை இல்லை. இதனால் நாங்கள் என்ன செய்வது. அரசும் எங்களுக்கு போதிய நிவாரணம் கொடுக்கவில்லை. தற்போது சென்னையை விட்டு சொந்த ஊருக்கு சென்று உயிர் பிழைக்கலாம் என வந்தால், போலீசார் கெடுபிடி செய்கின்றனர். நாங்கள் என்னதான் செய்வது’ என வேதனையுடன் கூறினர்.

Related Stories: