தமிழகத்திற்கு 2017 முதல் 2020ம் ஆண்டு வரை வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.5,727 கோடியை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்

* மத்திய நிதியமைச்சர் நிர்மலாவிடம் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை:   மத்திய நிதித்துறை மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் 40வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார். அவருடன் தொழில்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: 2017-2018ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகை  ₹4,073 கோடியை விரைந்து வழங்கிட வேண்டும். 2018-2019ம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ₹553.01 கோடி மற்றும் 2019-2020ம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ₹1,101.61 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையையும் மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் ஜவுளி, காலணி, செல்பேசி, உரங்கள் போன்ற பொருட்கள் தலைகீழான வரி கட்டமைப்பு கொண்டுள்ளன. இதனால் தொழில் புரிவோர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதுடன் வரி திருப்பு தொகையும் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனை சீர் செய்ய வேண்டும். துணி மற்றும் ஆயத்த ஆடை மீதான வரியானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது ஏற்புடையதல்ல. உரங்கள் மீதான வரியினை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஆக உயர்த்த கூடாது.வணிகர்களின் கோரிக்கைகளான கைத்தறி பொருட்கள், கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிக சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள், ஜவ்வரிசி, ஊறுகாய், வெண்ணெய், நெய், விவசாய கருவிகள், ஜவுளி தொழிலில் பயன்படும் இயந்திர பாகங்கள், பம்பு செட்டுகள், மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள், நொறுக்கு தீனிகள், பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், வத்தல்கள், பிஸ்கட்டுகள், உரம், பூச்சி கொல்லிகள், கற்பூரம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, மஞ்சள், சீயக்காய், காகித பொருட்கள், மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், வெள்ளி மெட்டி, தாலி, துணி பை, மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: