பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏக்கள், எம்பி கோரிக்கை

காஞ்சிபுரம்: நெசவாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என  திமுக எம்எல்ஏக்கள், எம்பி கோரிக்கை வைத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வாழ்வாதாரம் இழந்து நிற்கும் நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பொன்னையாவிடம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த பட்டு சேலைகள் தயாரிப்பில் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான ராஜாம்பேட்டை, அய்யம்பேட்டை, புஞ்சை அரசன்தாங்கல், அய்யங்கார்குளம் உள்பட பல பகுதிகளை  சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க நெசவாளர்கள், 25 ஆயிரம் தனியார் நெசவாளர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய ஊரடங்கால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. கடந்த 2 மாதங்களாக நெசவாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். ஏற்கனவே மூலட்பொருள்களான கோரா, பட்டு, ஜரிகை விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி ,போலி பட்டுப்புடவைகள் போன்ற காரணங்களால் பட்டு நெசவுத் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இந்தவேளையில், தொடர் ஊரடங்கால் வேலை இல்லாமல் குழந்தைகளுடன் நெசவாளர்கள் ஒருவேளை உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். மேலும் அரசு அறிவித்த எந்த உதவித்தொகையும் இதுவரை நெசவாளர்களுக்கு வந்து சேரவில்லை. எனவே, கூட்டுறவு சங்க நெசவாளர்கள், தனியார் நெசவாளர்கள் என அனைத்து நெசவாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: