10ம் வகுப்பு பொது தேர்வை நிறுத்த கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தலைவர்கள் கூட்டறிக்கை

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு தற்போதைக்கு நிறுத்தக் கோரி வருகிற 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் ேக.எம். காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன், மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்பது லட்சம் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து தேர்வுகள் எழுதியாக வேண்டும். இதனால் அவர்களது பெற்றோர்களும் லட்சக்கணக்கில் வெளியில் வந்தாக வேண்டும். 3 லட்சம் ஆசிரியர்களும், பல லட்சம் ஊழியர்களும் பணிக்கு வந்தாக வேண்டும். இதைப் பற்றிய கவலையே தமிழக அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லை.

மாணவர்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம் இந்த அரசாங்கத்தால் தரமுடியும்? காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் தனியாக உட்கார்ந்து தேர்வு எழுதியாக வேண்டும் என்று சொன்னதைப் போன்ற இரக்கமற்ற செயல் வேறு என்ன இருக்க முடியும்? ஏதோ தன்னைச் சர்வாதிகாரி போல நினைத்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். இந்தச் சூழலில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரைக் காக்கும் முயற்சியாக போராட்டம் நடத்தும் நிலைமையை அரசே ஏற்படுத்தி விட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு தற்போதைக்கு நிறுத்தக் கோரியும், கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்தப் பிறகு பெற்றோர் - ஆசிரியருடன் கலந்தாலோசனை செய்து தேர்வுத் தேதியை குறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தை 10ம் தேதி காலை 10 மணிக்கு நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.

பத்தாம் வகுப்புத் தேர்வை நிறுத்து கொரோனா காலத்தில் தேர்வுகள் எதற்கு? விளையாடாதே விளையாடாதே மாணவர்கள் உயிரோடு விளையாடாதே, கொரோனாவை நிறுத்து அப்புறம் தேர்வை நடத்து. இன்னுமா வரவில்லை இரக்கம்தேர்வை ரத்து செய்ய ஏன் தயக்கம்?” என்ற முழக்கங்களை நாடு முழுவதும் எழுப்பி எதிரொலித்திடச் செய்வோம். மாணவர்கள ஆசிரியர்கள் அவரவர் இல்லத்தின் முன்பு ஐந்து பேர் கூடி, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், கொரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும் முழக்கங்களை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம். இரக்கமற்ற அரசின் இதயத்தை வேகமாகத் தட்டி எழுப்புவதாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: