சிகிச்சை கட்டணம் ரூ.11 ஆயிரத்தை வசூலிக்க முதியவரை கட்டிலில் கயிற்றால் கட்டி வைத்த மருத்துவமனை: மத்திய பிரதேசத்தில் அட்டூழியம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை செலுத்தாததால் முதியவரை கட்டிலில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதியவர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது, முதியவரின் மகள் ரூ.5,000த்தை மருத்துவமனையில் டெபாசிட் செய்தார். அதன் பிறகே, மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து மேலும் சில நாட்களுக்கு முதியவருக்கு மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதலாக ரூ.11,000ம் கட்டணத்தை மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. ஆனால், முதியவரின் மகளிடம் பணம் இல்லை. இதனால், பணத்தை எடுத்து வரும் வரை முதியவரை வெளியே செல்ல அனுமதிக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், தப்பிச் செல்லாத வகையில் அவரது கால்களை கட்டிலில் கயிறு மூலம் கட்டி வைத்தது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ‘முதியவருக்கு நீர்ச்சத்து சமநிலையின்மை காணப்படுகிறது. அவர் மன உளைச்சலில் இருப்பதால் அவரை அவரே காயப்படுத்திக் கொள்வதை தவிர்க்கும் வகையில், கால்கள் கட்டப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் செலுத்த வேண்டிய மருத்துவ கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,’ என தெரிவித்துள்ளது. முதியவரின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து பேசிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ நிர்வாகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: