தமிழகத்தில் அனுமதி இல்லை; நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பு...உற்சாகத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்...!

டெல்லி; நாடு முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயில், பள்ளிவாசல், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடந்தது. ஆனால், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று கோயில், தேவாலயங்களில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடந்து வருகிறது. மேலும், இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்து தொழுகை செய்து வருகின்றனர். கடந்த 75 நாட்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஒரு சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு இன்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுடன் திறக்கப்பட்டது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் 78 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயில் ஊழியர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 10-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைபோல், புதுச்சேரி மாநிலத்தில் 70 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலும் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கோயில்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சனை செய்தார்.

இதற்கிடையே, தமிழக அரசு சார்பில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், வழிபாட்டு தலங்களை இன்று திறக்க அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: