சென்னை ராயபுரம் அரசு சிறுவர் காப்பகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை: சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை ராயபுரத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே 23 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதன் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிப்பானது குறைந்தபாடில்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த வைரஸானது ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்து 55 ஆதரவற்ற குழந்தைகள் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் கடந்த 2 மாதங்களாக தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 55 குழந்தைகளில் 23 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, காப்பகத்தில் உள்ள 23 குழந்தைகள் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, 32 குழந்தைகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அருகிலுள்ள சமூகநல கூடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அச்சிறுவர் காப்பகத்தை மாநகராட்சி அதிகாரிகள்  கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீதமுள்ள குழந்தைகளில் 12 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து சிறுவர்களும் தண்டையார் பேட்டையில் இருக்கக்கூடிய தொற்று மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: