நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பால் சென்னையில் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனைகள்: இனி பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க இடமில்லை!

சென்னை: சென்னையில் நாள்தோறும் 1000 பேர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கொரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் சேர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 30,152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16,395 பேர் குணமடைந்த நிலையில், 13,503 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,223 பேருக்கு சென்னையில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், சென்னையில் இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனாவுக்காக ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்களில் 10,000 படுக்கை வசதிகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் தினமும் 1000 பேருக்கு மேல் தொற்று ஏற்படுவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடமில்லை. எனவே, இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் சேர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சில தனியார் மருத்துவமனைகளும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுப்பதால் இனி வரும் நாட்களில் மிகவும் நெருக்கடியான நிலை ஏற்படும் என தெரிகிறது.

Related Stories: