கொரோனாவின் புகுந்த வீடாக மாறிய சென்னை; தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்...!

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், பொதுமக்களுக்கு கடந்த மே 4ம் தேதியில் இருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவு குறைவாக இருந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கடந்த ஒரு மாதமாக தினசரி 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது தற்போது 1000ஐ தாண்டி விட்டது. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தினசரி நோய் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியாக ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். மேலும், 15 மண்டலங்களுக்கு நோயாளிகளை கண்டறியவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை கவனிக்க ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் தனித்தனி குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு மாறாக, தினசரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மே 30-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை ஒருநாளுக்கு சராசரியாக 8,970 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக பங்கஜ் குமார் பன்சால் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: