செல்போனில் மகள் நீண்டநேரம் பேசியதால் தகராறு: மாஜி ராணுவ வீரர் தாயுடன் தற்கொலை

பல்லாவரம்: பம்மல் அண்ணா நகர் காந்தி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜ் (53). இவர், தனது தாய் கண்ணம்மாள் (87), மனைவி சீமா (48) மற்றும் மகள் சொர்ணா (21) ஆகியோருடன் வசித்து வந்தார். முன்னாள் ராணுவ வீரரான நடராஜ், தற்போது அதே பகுதியில் உள்ள தனியார் வங்கி காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சொர்ணா, தனது நண்பர் ஒருவருடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசியுள்ளார். இதை நடராஜன் கண்டித்துள்ளார். அப்போது, அவரது மனைவி சீமா, பெண்ணுக்கு ஆதரவாக பேசி, கணவர் நடராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், சொர்ணாவிடம் இருந்து செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்தார். பின்னர் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.

நேற்று காலை  சொர்ணா வழக்கம்போல் வேலைக்கு சென்றார். சீமா அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். மனைவியும், மகளும் தன்னை மதிக்கவில்லை என மனமுடைந்து காணப்பட்ட நடராஜ், தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்துவிட்டால் தனது தாய் கண்ணம்மாள் தனிமையில் சிரமப்படுவார் என்று கருதி, தனது தற்கொலை திட்டத்தை தாயிடம் கூறினார். அவரும் சம்மதிக்கவே, இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய சீமா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருநின்றவூர் கணபதி நகர் போஸ்டல் அவின்யூவை சேர்ந்தவர் சிவக்குமார் (41). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஊரடங்கால் கடந்த 2 மாதமாக வேலையிழந்த சிவகுமார் குடும்ப செலவுக்கு பணமின்றி திண்டாடி வந்தார். இதனால் நேற்று தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சிவகுமார் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: