குற்றப்பத்திரிகை தாக்கல் தாமதமானால் ஜாமீன் வழங்க முடியுமா?: ஐகோர்ட்டில் விரைவில் தீர்ப்பு

சென்னை: சட்ட விதிகளுக்கு உட்பட்ட காலக்கட்டத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் ஜாமீன் வழங்க முடியுமா என்பது குறித்த தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் விரைவில் வெளியாக உள்ளது.  குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை குறித்த காலக்கட்டத்துக்குள் முடித்து குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்றால் அந்த வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் பெற அதுவே முக்கிய காரணமாக அமைந்துவிடும். போலீசாரின் காலதாமதத்தை வைத்து அவர்கள் எளிதாக ஜாமீன் பெற முடியும்.    இந்நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்துடன் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.சுவாமிநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருந்தனர்.

இதனால், சட்ட ரீதியாக இறுதி முடிவு எடுப்பதற்காக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வை அமைத்து உத்தரவிட்டார். இந்த அமர்வு ஜாமீன் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.  இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து 90 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய முக்கிய நபரான ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கைதான மேலும் பலர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘சிறப்பு அமர்வு தீர்ப்பு விரைவில் வர உள்ளதால், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: